Thursday, March 6, 2014

துரோகம் வெட்கமறியாது! - தெ.சுந்தரமகாலிங்கம்





ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கமே ஈழத் தமிழர்களுக்கு எதிரான வலுவான பொய்யான பரப்புரையுடன் அமைந்துள்ளது. சொந்த நாளிதழ் என்ற காரணத்தால் ‘தி இந்து’ நாளிதழின் தமிழ்ப்பதிப்பில் என்.ராம் வழங்கியுள்ள சிறப்புப் பேட்டி பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article5524113.ece

  பேட்டியின் தலைப்பே “சாத்தியமே இல்லாதது தமிழீழம்” என்றுள்ளது.

எது சாத்தியம் இல்லாதது?

 அறுபது ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்! இசைத்தட்டின் பக்கத்தை மாற்றிப் போட்டு ஊசி மாற்றிப் பாட்டுக்கேட்டது நினைவிருக்கிறதா? இன்று விரல் அகலத் தட்டுக்குள் நானூறு பாடல்!

 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தொடங்கிய ராமின் மூதாதையர் இன்றைய ஊடக வசதிகளை அன்று சாத்தியமென்று எண்ணியிருப்பார்களா?

 சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையுடனா நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாழத் துணிந்து தம் இன மக்களுக்குச் சுதந்திரமான ஆட்சியைப் பெற்று தந்தார்?

 “விடுதலைப்புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடுதான் அணுகினோம். அவர்களுடைய நியாயங்களை எழுதினோம். ஆனால் ரொம்ப சீக்கிரமே அவர்கள் குரூரமாகத் தங்கள் முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக்குழுக்கள் போராட்டத்தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள்” என்று ராம் எழுதியுள்ளார்.

 சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நிலையில் நின்று கொண்டு இலங்கைக்கு ஆயுத உதவியோடு வேறு பல உதவிகளையும் செய்து வந்த வேளையில் ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டு வருவதற்காக ‘ரா’மூலம் ஈழப் பேராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் ராணுவப்பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார் இந்திராகாந்தி.

 இதைக்கூட இந்திரா காந்தி எளிதில் செய்துவிடவில்லை. 1983 ஜூலையில் இலங்கையில் சிங்களர்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றனர். தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்தனர். சொத்துக்களை, வீடுகளைச் சூறையாடினர். இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். தமிழ்நாடே கொந்தளித்தது. அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை 24.10.1983ல் அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில்தான் இந்திராகாந்தி ஈழப்பிரச்சினையில் தலையிட்டார்.

 கிழக்கு பாகிஸ்தானில் இனப் படுகொலை நடப்பதாக உலகநாடுகளில் முரசறைந்து விட்டு வந்த கையோடு இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேசம் மலரச்செய்தவர் இந்திராகாந்தி.

 “தமிழன் கறி இங்கே கிடைக்கும்” என அறிவிப்புப் பலகையை தொங்கவிட்ட இனவெறிச் சிங்களர்களை ஒடுக்க இந்திரா அம்மையார் ராணுத்தை ஈழத்துக்கு அனுப்பவில்லை.

 இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இலங்கையின் கைக்கூலியாக மாறியது. விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனைக் கொல்ல ஏனைய பேராளிக்குழுக்களுக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு ஆயுதங்களும் வழங்கியது ‘ரா’.

 சக போராளிக் குழுக்கள் எதிரிகளாக, துரோகிகளாக மாறிய நிலையில் பிரபாகரன் தற்காத்துக் கொள்ள அவர்களை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 ராம் பெரிய படிப்பாளி, இடதுசாரி இயக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டவராகப் பேட்டியில் தம்மை அடையாளம் காட்டிக்கொள்பவர். கம்யூனிஸ்ட் நாடுகளில் துரோகிகளை அழிப்பது மிக முக்கியமாகக் கருதப்பட்டது அவருக்குத் தெரியாதா? தெரியும். எனினும் புலிகள் இயக்கத்தின்மீது சேற்றை வாரி வீசத் துணிந்துவிட்டவர் இப்படி ஏதேனும் செல்லுபடியாகாத குற்றச்சாட்டைக் கூறியாக வேண்டும்.

 அகிம்சையே உருவான காந்திஜியின் தலைமையை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் மகத்தான தியாகங்களைச் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தம் இறுதிக் காலத்தில் அரசியலைவிட்டு ஒதுங்கி மளிகைக்கடை வைத்துப் பிழைப்பு நடத்தியதற்க்கான காரணத்தை ராம் கூறுவாரா?.

 சஞ்சய்காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் மரணத்துக்கும் டில்லி சிம்மாசனத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் உணரவேண்டும். சுல்தான்கள் ஆட்சி தொடங்கி முகலாயர் ஆட்சி முடியவுள்ள வரலாற்றைச் சற்று ஊன்றிப் படித்தாரானால் அவருக்குப் புரியும். இப்படிச் சகட்டு மேனிக்குப் பிரபாகரனைப் பழிப்பதை நிறுத்திக்கொள்வார்.

 இலங்கைப் பிரச்சினை என்று பொதுப்படையாக அழைக்கப்படும் ஈழப் பிரச்சினையில் இந்தியா என்றுமே போதிய அக்கறை காட்டியதில்லை.

 ஒருமுறை டில்லி மாநிலங்களவையில் ஈழத்தமிழர் பிரச்சினைப்பற்றி அண்ணா மிக உருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன் குறுக்கிட்டு “நீங்கள் ஏன் வேறு நாட்டுச் சிக்கலை இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறீர்கள்? இது பிற நாட்டு உள் விஷயத்தில் தலையிடுவதாக ஆகாதா?” என்று கேட்டார்.

 அதற்கு அண்ணா “அடுத்த வீட்டில் கணவன்-மனைவி நெருக்கமாக இருக்கும்போது எட்டிப்பார்ப்பது தவறுதான். ஆனால் இந்த மனைவியைக் கொடுமைக்காரக் கணவன் கழுத்தை நெரித்துக் கொல்ல முயலும்போது அவள் கத்துவதைக் கேட்டு ஒடி உதவுவது எப்படி தவறாகும்? அதிலும் அந்தப் பெண் எனக்கு தங்கையாக இருக்கும்போது” என்றார். இதைக்கேட்டதும் அமைச்சர் மௌனமாகிவிட்டார்.

 இன்று சல்மான்குர்ஷித் முடிய “இலங்கை நட்பு நாடு” என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
கிருஷ்ணமேனனின் வாரிசுகளாக ஏ.கே.அந்தோனி, சிவசங்கரமேனன், எம்.கே.நாராயணன், ஐ.நா.அவையில் விஜய் நம்பியார் என்று மலையாளிகளாக இருந்து கொண்டு ஈழப்பிரச்சினையில் தமிழர் விரோதப் போக்கைப் பின்பற்றுவதைச் சாதாரணமாக நினைக்கக்கூடாது.

 “பின் வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்துவிட்டன. உண்மையில் பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட். துப்பாக்கிகள் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்தில்லோ இல்லை. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்கு தெளிவாகிவட்டது” என்கிறார் ராம்.

 பிரபாகரனுக்கு அரசியல் தெரியவில்லை என்று கூறுவது மொத்த விஷயத்தையும் மூடி மறைக்கச் செய்யும் பித்தலாட்டமாகும் . விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தெளிவான அரசியல் பார்வை இருந்தது. “தமிழீழம் எங்கள் தாகம்” என்னும் சிறு பிரசுரத்தில் அது காணக் கிடைக்கிறது. தமிழீழ விடுதலையைத் தவிர அவருக்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

 நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே தந்தை செல்வா காலத்திலிருந்தே சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நடந்த ஆயுதமற்ற போராட்டங்கள் பயனற்றுப் போன நிலையில் தானே விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தினார்கள்.

 இந்திய சுதந்திரப் போரட்ட காலத்தில் பகத்சிங்,நேதாஜி போன்றோர் ஆயுதமேந்திப் போராடியது ராமுக்குத் தெரியாதா?

 “இந்த பொடியன்களை விட்டா (விடுதலைப்புலிகளை) எங்களுக்கு ஆரிருக்கா?” என்று ஈழ மக்கள் கூறியதை வானொலி வழியே நான் கேட்டிருக்கிறேன். அதுதானே உண்மையும்.

 தமிழீழ விடுதலையைத் தவிர அவருக்கு வேறு என்ன நோக்கம் இருக்கமுடியும்? பிற நோக்கங்கள் இருந்தால் அவற்றை ராம் பட்டியலிட்டுக் காட்டலாம். அதை விட்டுவிட்டுப் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டக்கூடாது.
 
பிரபாகரனுக்குப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று ராம் கூறுவது ஆதாரமற்றது.

 திம்பு பேச்சுவார்த்தையின்போது ராஜீவ் காந்தி மிகப்பெரிய நாட்டின் பிரதமர் என்ற நிலையில் திமிருடன் நடந்து கொண்டார். பிரபாகரனை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

 நார்வே பேச்சு வார்த்தைகளிலும் சிங்கள அரசின் பிடிவாதப் போக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. பின்னாளில் நார்வே தரப்பு ஒதுங்குவதற்கு இந்தியா ஒரு காரணமாக விளங்கியது தெரிய வந்தது. 

 புலிகளின் அரசியல் விவகாரத்தை அண்டன் பாலசிங்கம் கவனித்து வந்தார் என்பதைப் புலிகள் கூட்டிய சர்வதேச நிருபர்கள் கூட்டத்தில் நாம் கண்டோம். ஒவ்வொரு துறைக்கும் தக்க ஆலோசகர்கள் பிரபாகரனிடம் இருந்தனர். 
 பிரபாகரனுக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லை என்று ராம் குற்றம் சாட்டுகிறார். ஜனநாயகம் என்று அவர் எதைக் கருதுகிறார்?

 பேட்டியின்போது “இந்திய வரலாற்றில் நடந்த மாபெரும் வரலாற்றுத் தவறு” என்று இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையை ராம் சுட்டிக் காட்டுகிறார். அத்தகைய தவறு ஜனநாயக நாடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தானே நடந்தது!

 காங்கிரஸ் கட்சியில் என்ன ஜனநாயகம் வாழ்கிறது? ஒரு வார்டு மெம்பர் நியமனத்துக்கும் சோனியா முகத்தைப் பார்க்கும் நிலைதானே உள்ளது. 

 இடதுசாரிக் கட்சிகளிடம் உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. வேறு எந்தக் கட்சி ஜனநாயக முறைப்படி காரியங்களை நடத்திக் கொண்டிருக்கிறது?

 வெள்ளைக்காரன் கொண்டு வந்த ”ரௌலட் சட்டம்” பண்டித மோதிலால் நேருவின் கடும் கண்டனத்தைச் சந்தித்தது. ஆனால், இன்று சுதந்திர ஜனநாயக இந்தியாவில் ரௌலட் சட்டத்தைக் காட்டிலும் கொடுமையான உட்பிரிவுகளைக் கொண்ட தடா, பொடா, எஸ்மா, டெஸ்மா என்று வரிசையாக அணிவகுத்து நிற்கும் கறுப்புச் சட்டங்கள் எத்தனை!.

 உச்ச நீதிமன்ற அறிவுரைக்குப் பின்னும் இதுவரை பேரிடர் மேலாண்மைப் பாதுகாப்பு ஒத்திகை ஒருமுறை கூடக் கூடங்குளத்தில் நடத்தப்படவில்லை என்பதுதான் இங்கே ஜனநாயகம் இருக்கும் லட்சணம்!.

 இந்தியச் சிறைச் சாலைகளில் விசாரணைக் கைதிகள் என்ற அளவில் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்துக் கொண்டிருப்போரைப் பற்றிக் கவலைப்படாதது இந்திய ஜனநாயகம்!.
 சாதியும் சாராயமும் பணமும் வாக்குகளைக் குவிப்பதன் மூலம் கட்டமைக்கப்படுவது இங்கே ஜனநாயகம்!.

 சீனாவுக்கு ஜனநாயகம் குறித்து எடுத்துச் சொல்வாரா ராம்?

 ஆயுதப் போராட்டம் அரசுப் பயங்கரவாதத்தை எதிர்த்து நடக்கும் நிலையில் ரகசியம் காக்கப்படுவது மிக முக்கியம். அங்கே ‘ஜனநாயகம்’ பொருத்தமற்றது. 

 துரோகி கருணாவை விட்டுவைத்தது ஈழப் போரில் புலிகளின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். 

 ஆயுதப் புரட்சியாளர்கள் துப்பாக்கியின் மீதுதான் நம்பிக்கை வைக்கமுடியும். “கடவுளை நம்பு” அதே சமயம் வெடிமருந்தை நனையவிடாமல் பார்த்துக்கொள்” என்ற வாசகத்தை ராம் கேட்டதில்லையா?

 “ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்” என்பது எதன்பொருட்டு ஏற்பட்டது? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவான விஷயங்களில் பிணக்கு இருந்ததா?

 அரசியலில் ராஜீவ் காந்தி கற்றுக்குட்டி என்பதற்கும் ஜெயவர்த்தனே பழந்தின்று கொட்டை போட்டவர் என்பதற்கும் அவ்வொப்பந்தமே சாட்சி. 
 ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிகச் சரியான உதாரணம் கூறி ஒப்பந்தத்தின் தன்மையைத் தோலுரித்தார். 

 கணவன் - மனைவிக்கிடையே தகராறு. நடுவர் என்ன செய்ய வேண்டும்? அவ்விருவருக்கும் இடையே ஒப்பந்த விதிமுறைகளை எழுதி அவர்கள் கையெழுத்திட்டபின் நடுவர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும்; அவர்களில் எவரேனும் ஒருவர் விதிமுறையை மீறினால் நடுவர் மற்றவருடன் சேர்ந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங்கே மனைவியை அடிப்பதற்குக் கணவனுடன் நடுவர் ஒப்பந்தம் செய்திருக்கிறார்!.

 இதற்கு மேல் தெளிவாக வேறு யார் கூற முடியும்?

 “தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள், எல்லாவற்றிற்க்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை... புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள்” என்கிறார் ராம். 

 அரசியல் படுகொலைகளுக்கான காரணத்தை ஏற்கனவே விளக்கியாகிவிட்டது. “செய்த அட்டூழியங்கள்” என்பதற்கான பட்டியலை வெளியிடுவாரா ராம்? சர்வதேசப் போர் நெறிகளை மீறி “உங்கள் நண்பர் ராஜபக்ஷே” என்று பேட்டியாளர் குறிப்பிடும் ராஜபட்சேவின் ராணுவத்தால் போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை நாம் அறியவில்லையா? பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றின் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் குழந்தைகளையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றழித்தது உண்மையல்லவா?

 “பேச்சு வார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள்” என்று ராம் குறிப்பிடுவது இந்திய, சிங்கள அரசுகளின் யோசனையை ஏற்று அடிமை வாழ்வைத் தொடர்வதே. 

 “எல்லாவற்றிற்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை” என்று ராம் குறிப்பிடுவதை இங்கு விளக்கியாக வேண்டும். 

 ‘இந்திய அமைதிப் படை’ என்ற பெயரில் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தின் கூர்க்கர் பிரிவு சென்றது. யாரை எதிர்த்து, எதற்காகப் போரிடுகிறோம் என்பது வீரர்களுக்குத் தெரியவேண்டும். சுற்றி வளைத்துக் கடைசியில் இந்துக்களான தமிழர்களைக் கொல்வது தங்கள் வேலை என்பதை அறிந்ததும் “இந்துக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கமாட்டோம்” என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தானே இந்திய ராணுவத்தில் சேர்ந்தோம். எங்களை இந்தியாவுக்கு அனுப்புங்கள்” என்று முரண்டு பிடித்ததால் கூர்க்கர் பிரிவு, சென்ற சுவடு தெரியாமல் உடனே திருப்பி அனுப்பப்பட்டது. 

 இந்நிகழ்ச்சி உண்மைதானா என்பதைத் தம் நாளிதழின் பெயரை ‘தி இந்து’ என வைத்துள்ள ராம் விசாரித்து அறிந்து தம் மதச்சார்பின்மையை அறிவிக்கலாம்.
 பொற்கோயில் நடவடிக்கையின்போது மெட்ராஸ் ரெஜிமெண்டை அனுப்பினார் இந்திராகாந்தி. ஈழத்தமிழர்களை ஒழிக்க சிக் ரெஜிமெண்டை அனுப்பினார் ராஜீவ் காந்தி. ஏமாந்தவர்கள் ராணுவ வீரர்களே!.
 ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் ஆங்கில நாளேடான “இண்டியன் எக்ஸ்பிரஸ்” இதழில் '’Who is the Ravana' என்ற தலைப்பில் கடிதமொன்று எழுதினார்.

 “இளம் விதவையான ராணுவ வீரரின் மனைவியிடம் சிறுவனான மகன் மாலை சூட்டப்பட்ட அப்பாவின் படத்தைப் பார்த்து ‘அப்பா யாரை எதிர்த்துப் போரிட்டு இறந்தார்?’ எனக் கேட்டதும் அந்தத் தாய் பதில் கூற முடியாமல் திணறினாள். வீர மரணம் எய்துவதைப் பெருமையாகக் கருதவேண்டிய பெண் வீணான மரணம் குறித்து என்ன சொல்வாள்? "குண்டு துளைக்காத சட்டை அணிந்து கொண்டு கறுப்புப் பூனைகளுடன் வலம் வரும் ராஜீவ் காந்தி அவர்களே!. அநியாயப் போருக்கு ராணுவ வீரர்களைப் பலி கொடுக்காதீர்,” என்றல்லவா சொல்வாள்?!

 ஜெயவர்த்தனேவிடம் எளிதில் ஏமாந்துபோன ராஜீவ்காந்தி ஈழப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் ‘புடுங்கும்’ வேலையைச் செய்ய ராணுவத்தை அனுப்பினார். இந்திய ராணுவத்தைக் கூலிப் படையாக்கியது இலங்கையைப் பொறுத்த அளவில் இது இரண்டாவது முறையாகும். 

 இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கையில் ‘ஜன விமுக்தி பெரமுனா’ என்ற கட்சி மிகப் பெரிய புரட்சியை நடத்தியது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய ராணுவத்தை அனுப்பி அப்புரட்சியை ஒடுக்கினார்.
 தாய்க்கும் மகனுக்கும் இலங்கை அரசின் மீது எத்துணை பரிவு!. அதற்கு ஈடாகத்தான் இன்று இந்தியாவை நாய்க்கும் கீழாக மதிக்கிறார் ராஜபக்சே!.

 இந்திய அமைதிப்படை ஈழத் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளைத் ‘தீராநதி’யில் நினைவு கூர்ந்துள்ளார் எழுத்தாளர் வாஸந்தி.

 ராஜீவ் காந்தியின் கொலைக்கான முகாந்திரங்கள் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையை அருள் கூர்ந்து ராம் தம்’தி இந்து’ நாளிதழில் வெளியிட வேண்டும்.

 திருச்சி வேலுச்சாமி என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணர்ந்து நூலொன்று வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய சிலர் வெளியிலுள்ளனர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். புலனாய்வில் ஆர்வமுள்ள ராம் உடனடியாக அந்நூல் கூறியுள்ள விஷயங்கள் தொடர்பாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். 

 தமிழீழக் கோரிக்கை குறித்து “அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது” என்று நிராகரிக்கிநார் ராம். சிங்களப் பேரினவாதம் என்ற ஒன்று இலங்கையில் இருப்பதை வேண்டுமென்றே மறைத்துப் பேசும் பேச்சு அது.

 மதம், மொழி, இன அடிப்படையில் நாடுகள் இருப்பது ராமுக்குத் தெரியாதா?

 “போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க ராஜபக்ஷே தயக்கமின்றிச் செயல்படவேண்டும்” என்ற ராம் தமிழரல்லாத மூன்றாம் நபராக நின்று கொண்டு அநியாயத்துக்கு வக்காலத்து வாங்கும் செயல்தான் இது. 

கொலையாளியையே கொலைபற்றி விசாரிக்கச் சொன்னால் எப்படி இருக்கும்?

 ராம் உண்மையானவராக இருக்கும் பட்சத்தில் பிரியங்கா – நளினி சந்திப்பு வேலூர்ச் சிறையில் நடந்ததைப் பற்றிய முழு விபரங்களையும் தம் நாளிதழில் வெளியிட வேண்டும்.  

 தேவயானி கைது விவகாரத்துக்காகப் “பிரச்சினையை முடிக்காமல் நாடாளுமன்றத்துக்குள் காலடி வைக்க மாட்டேன்” என்று சல்மான் குர்ஷித் கூறுவதும் “அமெரிக்கா மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்” என மற்றொரு மத்திய அமைச்சர் கூறுவதும் நாம் ஏதோ வேற்று நாட்டில் வாழ்வது போன்ற தோற்றத்தைத் தரவில்லையா?

 தமிழக மீனவர்கள் அன்றாடம் தாக்கப்படுவதும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் அருவருப்பாகத் தோன்றவில்லையா?

 மன்மோகன் சிங்குக்கு விபரங்கள் தெரியாதா? 

 அப்பன் வீட்டுச் சொத்தாகக் கருதிக் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தந்ததன் விளைவுதானே தமிழக மீனவர்களின் சிக்கல். 

 ஒன்று தெளிவாகத் தெரிகிறது. கூச்சமேயில்லாமல் தமிழர்களுக்கு விரோதமாகப் பேசத் தமிழ்நாட்டிலேயே துரோகிகளை அணி திரட்டுகிறார் ராம்!. பார்க்கலாம்!. 

தரவுகள் :  
’மீட்சி’ 
‘மண்மொழி’
‘தமிழ்நேயம்’
‘தீராநதி’
 
- தெ.சுந்தரமகாலிங்கம்,
வத்திராயிருப்பு
(தொடர்பு எண்: +91 9443556950)

No comments:

Post a Comment